நடிப்பு என்றொரு கலை உண்டு. அந்த கலைக்கு வேறு பெயர் வைக்க வேண்டுமென்றால் வைகைப்புயல் வடிவேலு என தாராளமாய் மாற்றுச் சிந்தனையின்றி வைக்கலாம். அதற்கு முழுத் தகுதி உடையவர் பெரும் மதிப்பிற்குரிய அண்ணன், எங்கள் மண்ணின் மைந்தன் திரு.வடிவேலு அவர்கள். திரையில் வடிவேலு ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். நாடகத்தின் மூலமே நடிப்பை அதன் இலக்கணம் சிதையாமல் கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் வைகைப்புயல் வடிவேலு. பாமர மக்கள் முன்பு பயமில்லாமல் வார்த்தைகளில், முக பாவனைகளில் வசனங்களை கடத்தும் வித்தை அறிந்தவரே நடிப்பில் உச்சம் தொட முடியும். நான்கு சுவர்களுக்குள் ஏழெட்டு மனிதர்கள் முன்னிலையில் நடிப்பு பயிற்சி என்பது நம்மை நாமே தேற்றிக்கொள்ளும் சிறு முயற்சியேயன்றி வேறில்லை. நடிப்பின் முதல் படி கலை காசுக்கானது அல்ல என்பதை உணர்தலே. மக்களை மகிழ்விப்பதே ஒரு கலைஞனின் உச்சபட்ச இலக்கே தவிர, அவர்களின் நேரத்தையும், பொருளாதாரத்தையும் சுரண்டுவது அல்ல. அவ்வகையில் வைகைப்புயல் வடிவேலு கலைக்கான மனிதர். மக்களை மகிழ்விக்க வைகையில் தோன்றிய மகா கலைஞன். தமிழ்த் திரையுலகில் யாராலும் நிரப்பிட இயலாத ஒரு இடத்தை தன்னகத்தே தக்கவைத்துக்கொண்டவர் வைகைப்புயல் வடிவேலு.
உலகின் ஆகச்சிறந்த நடிகர்கள் என்றால் உடனே சார்லி சாப்ளின் மற்றும் Mr.Bean ஆகியோர் நம் நினைவுக்கு வருவார்கள். சார்லி சாப்ளின் என்றால் தலையில் தொப்பி, ஹிட்லர் மீசை, கையில் குச்சி என நம் நினைவுக்கு வருவார். அதேபோல் Mr.Bean என்றால் கோட் சூட்டில் குழந்தை முகம், குறும்புத்தனமான செயல்கள் என நினைவுக்கு வருவார். இவர்கள் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரங்களில் இடமும் கதைக்களமும் வித்தியாசப்படுமே தவிர அவர்களின் தோற்றமோ, உடல் மொழியிலோ பெரிதாக மாறுபாடு இருக்காது. ஆனால் வடிவேலு என்றவுடன் நம் மனக்கண் முன்னே முண்டியடித்துக்கொண்டு பல்வேறு கதாபாத்திரங்கள் வந்து செல்லும். கைப்புள்ள, கான்ட்ராக்டர் நேசமணி, பாக்சர் கிருஷ்ணன், 23-ம் புலிகேசி, அலார்ட் ஆறுமுகம், டெலக்ஸ் பாண்டியன், படித்துர பாண்டி, நாய் சேகர், வீரபாகு, ஸ்டைல் பாண்டி, வக்கீல் வண்டுமுருகன், வெடிமுத்து, ஏட்டு ஏகாம்பரம், தீப்பொறி திருமுகம், சமரசம், சூனா பானா, பேனர்ஜி, சின்னப்பகவதி, ஸ்னேக் பாபு, கிரேட் கிரிகாலன் என இன்னும் ஏராளமான கதாபாத்திரங்கள் நம் மனத்திரையில் சிரிப்பலையோடு அரங்கேறும்.
அத்தனை கதாபாத்திரங்களிலும் அதனியல்பு மாறாமல் கலைக்கு மகுடம் சூட்டியிருப்பார் அண்ணன் வடிவேலு. திரையுலகில் எந்தப் படத்தின் ட்ரெயிலர், டீசர், பாடல் என எதுவானாலும் அதற்கு வடிவேலு VERSON-ஐ MEME CREATORS உருவாக்கிவிடும் அளவிற்கு வைகைப்புயலின் நடிப்புக் கலஞ்சியம் கடலென காணக்கிடக்கிறது. சமூகச் சிக்கல்களை, அரசியல் பின்னணிகளை வார்த்தைகளில் விவரிப்பதை விட வடிவேலுவின் நடிப்பு துணுக்குகள் வழியே எளிதாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்படுகிறது. வடிவேலுவை தவிர உலகில் வேறெந்த கலைஞனுக்கும் இப்படியொரு சிறப்பு அமைந்திருக்கிறதா என்பது விடையற்ற வினாவே..! அத்தகைய மாபெறும் கலை மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்… எல்லாம் வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ்க அண்ணன் வைகைப்புயல் வடிவேலு அவர்களே… அன்புகளும் முத்தங்களும்…

ஒருநாளும் ஒருகனமும் இவர் சாயல், வசனங்கள் இல்லாமல் நகர்வது கிடையாது….