மனதின் ஆழத்தில் நெடுங்காலமாக படிந்து கிடக்கும் வலிமிகு நினைவுகளுக்கு எல்லாம் வாழை திரைப்படம் மறுவாழ்வு அளித்துவிடுமோ என்ற பயத்திலேயே திரையரங்கிற்குள் நுழைந்தேன். ஒரு கிராமம். முதல் தலைமுறையாய் தன் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கூலி வேலைக்கு செல்லும் மனிதர்கள் வாழும் கிராமம்… விடுமுறை நாட்களிலும் தன் பிள்ளைகளை வாழைத்தார் சுமக்க அழைத்துச் செல்லும் நிலைமையில் குடும்பங்களின் கடன் சுமை…படிப்பறிவு அற்ற பெற்றோர்களும் இளைஞர்களும் வாழுகின்ற ஊரில் கூலி வேலையைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. கணவன் இறந்ததால் தன் பிள்ளைகளை காப்பாற்ற நெஞ்சுறம் கொள்ளும் தாய், தன் மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் இளவட்டம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியல், கூலி வேலையில் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் இயல்பை மீறாமல் வலி நிறைந்த வாழ்வியலை பார்வையாளரின் மனதை உலுக்கும் வகையில் அப்பட்டமாக காட்சிப்படுத்தி உள்ளார் அண்ணன் மாரி செல்வராஜ்.
நடிப்பு பயிற்சி பெற்ற சில கலைஞர்களும், இயல்பாய் பல கலைஞர்களும் வாழை திரைப்படத்தில் ஒரு வாழ்வியலை அதன் இலக்கணம் சிதையாமல் வாழ்ந்துள்ளனர். வழியின்றி வலி அனுபவித்தவர்களுக்கு வாழையின் வலி மனதை உலுக்கி, உதிரத்தை சூடாக்கி, கண்களின் வழியே கடந்த கால வலிகள் எல்லாம் ஊற்று நீராய் வழிந்தோடும்.
செங்கல் சூளையிலும், விறகு வெட்டச் செல்வதில் தொடங்கி என் வாழ்விலும் இப்படியானதொரு வழி நிறைந்த வடுக்கள் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய நாளிலும் பல கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. சக மனிதனின் வலியை உணராத வரை வாழையின் வலி தொடர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறது.
இயலாமையே அதிகாரத்தின் மையப்புள்ளி. அது அனைத்து இடங்களிலும் இருக்கிறது. ஒரே வீட்டுக்குள்ளேயும் இருக்கிறது, ஒரே சமூகத்துக்குள்ளேயும் இருக்கிறது, பெரு நிறுவனங்களிடமும், உலக நாடுகளிடமும் இருக்கத்தான் செய்கிறது. இயல்புக்கு மாறாய் நடப்பவர்களிடம் அதிகாரம் செலுத்த வேண்டுமே தவிர, இயலாமையில் உள்ளவர்களிடம் அதிகாரம் செலுத்துவது அறிவுடைமை ஆகாது. வாழையால் வாழ்ந்தவர்களையும், வஞ்சனையால் மாண்டவர்களையும் கனத்த மனதுடன் நினைவு கூறுகிறேன். தங்கள் வலியை நானும் சிறிது பிய்த்தெடுத்து என் வலியோடு வழியாய் மனதின் ஆழத்தில் இட்டு மக்கச் செய்கிறேன் அண்ணே… வாழைத்தார் சுமந்து தங்கள் உச்சந்தலையில் உள்ள வலிகள் சற்று இளைப்பாறும் வகையில் உச்சி முகர்ந்து முத்தமிடுகிறேன் அண்ணே மாரி செல்வராஜ்🫂🖤
வாழ்வியல் சார்ந்த வாழையை அனைவரும் சென்று பாருங்கள். பார்த்த பிறகு வாழ்வின் முழுமைக்கும் வாழை இனிக்காது..
அருமையான பகிர்வு…
Nice words played good review on the movie loved to read the review