காடுகளை உருவாக்கவும் விரிவாக்கவும் மிக முக்கிய காரணமாக இருப்பது யானைகள் தான். காலநிலை மாற்றத்தை எதிர்த்து சண்டை போடவும் சூழலியல் அமைப்பை சமன்படுத்தவும் இயற்கைக்கு யானைகள் இன்றியமையாததாக இருக்கிறது. தினமும் 12 முதல் 16 மணி நேரம் உணவுக்காக அடர்ந்த அடவிகளில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சாணங்களாக விதைகளை பரப்பியும் பிற உயிரினங்களுக்கு பாதையையும் வாழ்வியலுக்கும் உதவிகரமாக கிட்டதட்ட ஒரு இயற்கை இன்ஜினியராக இருக்கின்றன. மானுடவியல் மற்றும் சூழலியலுக்கு யானைகள் மிக மிக அவசியமாகின்றன.

தந்தங்களுக்காக களிறுகளை கொலை செய்து அவற்றை கடத்தும் கும்பல்களை கைது செய்ய வனத்துறை விசாரணையில் இருந்து தொடங்கும் பாகம் உள்ளூர் வேட்டையாடிகளை பிடிக்க உள்ளத்தில் உரம் கொண்டு வேலை செய்கிறது. யானை வேட்டையில் சம்பந்தப்பட்டவர்களை பின்தொடர்ந்து அவர்களை பிடிக்கும் சவாலான காரியங்களையும் இடையிடையே அவர்களின் குடும்ப வாழ்க்கை பிரச்சனைகளைக் கடந்து உழைக்கிறது. தந்த(Tusk) வேட்டையில் ஈடுபட்டவர்களையும் அதன் சங்கிலித் தொடரை பின்பற்றி பணம் சம்பாதிக்கும் பாதகர்களையும் அதற்கு ஆர்டர் கொடுத்த பெரிய பணப்பெருச்சாலிகளையும் பிடித்தார்களா என்பதை உண்மை சம்பவங்களை தழுவி தொடராக எடுத்துள்ளார் இயக்குனர் ரிச்சி மேத்தா.
தனித்துவமான பிராஜெக்ட் களை தேர்ந்தெடுக்கும் நிமிசா சஜயன் இந்தத் தொடரிலும் அபாரமான உழைப்பை கொடுத்திருக்கிறார். ஆறு மணி நேரத்திற்கு மேலான தொடரை அலுப்பின்றி கொண்டு செல்வது அவர்தான். Crime Investigation-யை பிரதானமாக வைத்து Suspense Thriller-ஆக திரைக்கதையை நகர்த்தி இடையிடையே இல்வாழ்க்கை சிக்கல்களையும் வைத்து பார்வையாளர்களுக்கு அயர்ச்சி ஏற்படாமல் எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிச்சி மேத்தா. கான்க்ரீட் காடுகளுக்கும் அடர்ந்த காடுகளுக்குமான வித்தியாசத்தை பிண்ணனி இசை மூலம் உணர முடிகிறது. காடுகளிலும் பயணிக்கும் அனுபவத்தை இசையாக தந்திருக்கிறார் ஆன்ட்ரு லாகிங்டன். பறவைகளை படம்பிடித்து காடுகளை காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் ஜோஹன் ஹேயுர்லின் அய்ட் மற்றும் தொடருக்காக உழைத்த பிற கலைஞர்களும் மெனக்கெட்டிருக்கிறார்கள் பாராட்டுக்கள். தந்தத்திற்க்காக வேட்டையாடப்பட்ட யானை இறந்த இடத்திற்கு பிற யானைகள் வந்து நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் காட்சி மிக உணர்ப்பூர்வமாக அவைகளின் பாசத்தை நமக்கு கடத்துகிறது.
காடுகளை நம்பி வாழ்ந்து வந்த மக்கள் வனத்துறைச் சட்டத்திற்குப் பின், சுள்ளி பெருக்க சென்றவர்களும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டார்கள். அதுவரை காடுகளில் கிடைக்கும் அறிய வகை மூலிகைகள் தொடங்கி உயிரினங்கள் வரை சமவெளி மக்களின் தேவைக்காக, பயன்பாட்டிற்காக நுகர்வது அரசாங்கத்தின் வனத்துறைச் சட்டத்தால் தடுக்கப்பட்டது. அதை நம்பி பிழைப்பு நடத்திய மக்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது, அரசு அம்மக்களின் மறுவாழ்விற்க்கான எந்த ஏற்படுகளையும் உதவிகளையும் செய்யவில்லை. காடுகளுக்குள் நுழைவதே குற்றமாகிய பின் அதில் கிடைக்கும் பொருட்களுக்கு கள்ள சந்தையில் மவுசு அதிகமானது, வாழ்வதற்கு வழியற்ற அரசால் கைவிடப்பட்ட எளிய மக்கள் தங்கள் பிழைப்பிற்க்காக கள்ள சந்தையில் ஈடுபட்டனர். எளிய மக்கள் பெரிய பணக்காரர்களின் பகுமானத்திற்காக பலிஆடுகளாக ஆக்கப்பட்டனர். காட்டுக்குள் சட்ட விரோதமாக சாதாரண மக்களால் வேட்டையாடும் விலங்குகள் மற்றும் வெட்டப்படும் மரங்கள் பணமாக மாறுவதில்லை சமவெளிகளில் தொடங்கி சர்வதேச வெளியில் தான் கள்ள சந்தை பரிமாற்றமே நிகழ்கிறது.
இது குறித்த எந்த வித புரிதலும் இல்லாமல் காடுகளில் யானைகளை வேட்டையாடும் எளிய மக்கள் முழு முதல் குற்றவாளிகளாக தொடரில் பெரும்பாலும் பிரதானமாக துரத்தப்படுகின்றனர். அந்த குற்ற சங்கிலித் தொடரை பின்தொடர்ந்து இரண்டு இடைத்தரகர்களை பிடிப்பதோடு அவர்கள் வேலை நின்றுவிடுகிறது அல்லது நிறுத்தப்படுகிறது. இதில் போற போக்கில் வீரப்பன் குறித்த தெளிவற்ற வசனங்கள் வேறு. மற்றபடி வடக்கு தெற்கு அதிகாரிகள் அரசியல் ஓரளவிற்கு கையாளப்பட்டிருக்கிறது.
காடுகள் குறித்த அறிவில்லாதவர்களை அரசு அதிகாரிகளாக ஆக்கப்படுவதற்கு பதிலாக காடுகளின் பற்றிய புரிதல் உள்ள சாதாரண மக்களை ஏற்கனவே மனித சக்தி குறைவாக உள்ள வனத்துறையில் காடுகளை காக்கும் பணியில் (ஒப்பந்த முறையிலாவது) அதிலே படித்தவர்களுக்கு சற்று முன்னுரிமை அளித்து அதிகாரிகளாக பணியமர்த்தி அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியயும் இயற்கை சூழலியலையும் காப்பாற்ற வேண்டும். இந்த வேலையை அரசாங்கம் செய்ய வைப்பது நம் கையில் தான் உள்ளது.