சேது முதல் அர்ஜூன் ரெட்டி வரை பழக்கப்பட்ட அதே நாயக அடாவடிக்காதல் நிறைந்த முற்பாதி, மெளன ராகம் முதல் ராஜா ராணி வரை நிச்சய திருமணத்திற்கு பிறகான கணவன் மனைவி இடையேயான சண்டைகள் புரிதல்கள் கொண்ட பிற்பாதி. ஆட்டோகிராப், பிரேமம் போன்ற படங்களின் சாயல். இதுதான் ஜோ திரைப்படம். பழக்கப்பட்ட அடித்து துவைக்கப்பட்ட கதைக்களம் தான் என்றாலும் திரைக்கதை மற்றும் ஆக்கத்தை நம்பி எடுத்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம். சில இடங்களில் அது கைகொடுத்திருக்கிறது.

காதலர்களுக்கிடையேயான ஊடல், கூடல், பிரிவு, பள்ளி கல்லூரி கால நட்பு என்று முதல் பாதி நகர்ந்தாலும் சில இடங்களில் அலுப்பு தட்டுகிறது. பிற்பாதியில் இன்னும் கவனம் இருந்திருக்கலாம் ஒரு சில இடங்களில் எல்லாம் ஏய் நீ ரொம்ப அழகா இருக்க திரைப்படத்தில் விவேக் நகைச்சுவையாக கிண்டல் செய்யும் “காதல் ஜோதி” திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. சார்லி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருந்தாலும் அந்த கதாபாத்திரத்தின் நோக்கம் பார்ப்பவர்களுக்கு ஏற்கனவே தெரிந்து விடுவதால் மேலும் திரைப்படம் நீள்கிறது என்ற உணர்வை தருகிறது. நாயகி பாவ்யா ட்ரிக்கா (Bhavya Trikha) இன்னும் நடிப்பு பயிற்சி எடுக்க வேண்டும்.
மலையாள திரைப்பட பாணியிலான காட்சிகள் இருந்தாலும் ஒரு காட்சியில் இருந்து அடுத்த காட்சிக்கு செல்லும் Transition முதற்கொண்டு தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராகுல் K G விக்னேஷ். கதாபாத்திரங்கள் நடிக்க தவறும் இடத்தில் தாங்கிபிடிக்கும் பின்னணி இசை உருகி உருகி மற்றும் யுவன் பாடிய ஒரு பாடல் என்று படத்தை இழுத்து செல்ல உதவியிருக்கிறது சித்து குமாரின் இசை. பள்ளி கல்லூரி நட்பு காதல் பிரிவு என்று பல கட்டங்கள் கொண்ட முதல் பாதியை விட திருமண வாழ்க்கையை மட்டுமே கொண்ட இரண்டாம் பாதியை இன்னும் கவனமாக படத்தொகுப்பாளர் K.G. வருண் edit செய்து படத்தின் நீளத்தையும் குறைத்திருக்கலாம். பள்ளி கல்லூரி திருமணம் என ஒரு ஆணின் வாழ்க்கை பயணத்தை அந்த அந்த கால கட்டத்திற்க்கேற்ற நடிப்பு என ரியோ ராஜ் நடிப்பில் தேறியிருக்கிறார் உடன் வரும் அன்பு தாசனும் ஏகனும் கவனிக்க வைக்கிறார்கள். மலையாள நடிகை மாளவிகா மனோஜ் குறைவாக பேசினாலும் கதாபாத்திரத்துக்கு தேவையான நிறைவான நடிப்பை தந்துள்ளார். இறுதியில் வரும் குட்டி twist – cute.
ஒரு ஆணின் பள்ளி கல்லூரி திருமணம் என்ற வாழ்க்கை பயணத்தை குறித்த நிறைய திரைப்படங்கள் வந்துவிட்டன அதிலிருந்து இந்த படம் எந்த வித்தியாசத்தையும் கொண்டிருக்கவில்லை, இதே போன்று ஒரு பெண்ணின் வாழ்க்கை பயணத்தை குறித்து மிக மிக சில திரைப்படங்களே வந்துள்ளது அதில் குறிப்பிடத்தக்க திரைப்படமாக சமீபத்தில் (2019) வந்த கன்னட சினிமாவான கண்டுமூடே (Gantumoote) படத்தை சொல்லலாம்.