பாரி இளவழகன் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ஜமா’ திரைப்படம் அழிந்துவரும் தெருக்கூத்து கலையினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சொந்தமாக ஒரு நாடகக் குழுவை(ஜமா) ஏற்படுத்த முயலும் கதைநாயகனின் முயற்சிகளும், அதில் வரும் சிக்கல்களும் தான் ‘ஜமா’ படத்தின் கதை.
தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜமாவில் யாரும் தன்னை எதிர்த்து செயல்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் தாண்டவம். தன் தந்தையை போன்று தானும் ஒரு ஜமாவை ஆரம்பிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் முயற்சிகள் மேற்கொள்ளும் கதைநாயகன் கல்யாணம். தெருக்கூத்தில் திரௌபதி வேடமிட்டு வேடமிட்டு நடை, பாவனைகளில் பெண் சாயல் கொண்ட தன் மகனுக்கு திருமணம் செய்ய முயன்று முயன்று தோற்றுப் போகும் தாய். தன் படிப்பிற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த கல்யாணத்தை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படும் ஜெகதாம்பிகா. இதில் யாருடைய முயற்சி வெற்றியடைந்தது என்பதை தெருக்கூத்தின் வழியாகவே இயக்குநர் காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.
திரௌபதி என்ற வரலாற்று புனைவு கதாபாத்திரத்தை விரும்பி வேடமேற்று நடித்து வந்த கல்யாணத்திற்கு அவ்வேடமே தன்னுடைய வாழ்வில் பெறும் பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளில் தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன். பெண்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்களை குறை காண்பதற்கு இடமளிக்காமல் நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருப்பார். படம் முழுமைக்கும் கல்யாணம் கதாபாத்திரத்தை முட்டாளாகவே காட்சிப்படுத்த வேண்டிய தேவை என்ன? வெகு காலமாக ஜமாவில் நடித்துவரும் கல்யாணத்திற்கு எப்படி தனக்கென்று ஒரு ஜமாவை உருவாக்க தெரியாமல் உள்ளார்? தன்னை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கூட தன் சுயபுத்தியால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தாலும், கல்யாணத்தை விரும்பும் ஜெகா அதனை தெளிவுபடுத்தும் போதாவது புரிந்துகொள்ள முடியாத மனிதராக இருப்பதற்கான காரணம் என்ன? கலை மீதான பற்று, அதற்காக எதையும் செய்யலாம் என்பது ஒருபுறம் இருந்தாலும் சுயமரியாதையை இழந்து கலையை கற்பது என்பது அக்கலைக்கு நாம் செய்யும் துரோகமே அன்றி வேறில்லை. கிராமப்புறங்களில் இன்றளவும் இதுபோன்ற மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதற்கு ஒரு மாற்று சிந்தனையை ஜமா படத்தில் இயக்குநர் பாரி இளவழகன் தெளிவுப்படுத்தி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
கலை உலகில் போட்டிக்கும் பொறாமைக்கும் பஞ்சமில்லை என்பது இயல்பு. தன் வசம் உள்ள ஜமாவை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத, யாரும் தன்னை மீறி வளர்ந்து விடாத வகையில்(பேச்சு வழக்கில் பொழைக்க தெரிஞ்ச மனுசனாக) தாண்டவம் என்னும் கதாபாத்திரத்தில் தனது மற்றுமொரு சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார் மதிப்பிற்குரிய நடிகர் திரு.சேத்தன். கூத்து வாத்தியாராக, கணவனாக, தந்தையாக நடிப்பில் பல பரிமாணங்களை காட்டியிருப்பார் சேத்தன். ஜமா திரைப்படத்தில் தாண்டவம் கதாபாத்திரம் தான் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரம் என்பது என் தனிப்பட்ட கருத்து. இன்றைய சூழலில் தெருக்கூத்து கலைஞர்களாகட்டும், மேளம், தாளம், பறை இசைப்பவர்களாகட்டும், பந்தல் போடுபவர்களாகட்டும், மைக்செட் அமைப்பாளர்களாகட்டும் பெரும்பாலும் மதுவுக்கு அடிமையானவர்களாகவே இருந்து வருகிறார்கள். அதை கச்சிதமாக தாண்டவம் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியது இயக்குநரின் களப்பணியை பறைசாற்றுகிறது. கலையை கண்டுபிடித்தவரே வந்து அது தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறுவது கூட இயற்கைக்கு மாறான ஒன்று தான். ஏனெனில் கலை அனைவருக்கும் பொதுவானது. அதை உணரத் தவறியதாலேயே இளவரசுவின் கையில் இருந்து தாண்டவம் கைக்கு ஜமா மாறிற்று. இதில் வஞ்சனை கிடையாது, சதி கிடையாது. கலையை உணரத் தவறியதே இளவரசு அழிவிற்கு காரணம். இளவரசுவின் நிலைதான் கடைசியில் தாண்டவத்திற்கும் நிகழும். ஆனால் இருவர் இறப்பிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். தான் ஏற்று நடிக்கும் அருச்சுனன் கதாபாத்திரத்தை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுக்க மனமில்லாமல் பிடிவாதமாக இருந்ததால் ஜமா(கலை) இளவரசுவின் கைகளை விற்று போயிற்று. அதனால் மனமுடைந்து அவரின் உயிர் பிரிந்தது. கலையை விட தன் சுயத்திற்கு மதிப்பு அளித்ததால் இளவரசுவின் வாழ்க்கை முற்று பெற்றது.
தாண்டவம் வாழ்வியலும் கிட்டதட்ட இளவரசுவின் முடிவைப் போல தான். தான் செய்த தவறை உணராமல் இளவரசுவின் வாழ்வு முற்று பெற்றிருக்கும். ஆனால் தாண்டவம் தான் செய்த மாபெறும் தவற்றை உணரும் போது அவர் உயிர் பிரியும். கல்யாணம் கேட்ட அருச்சுனன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க அனுமதிக்கவில்லையே என்ற குற்ற உணர்ச்சியிலேயே இறுதியில் அவர் விழிகளில் வழியும் நீர் பார்வையாளர்களை இளகச் செய்யும் வல்லமை பெற்றிருக்கும். ஜமாவை திரையிலும் திரைவெளியிலும் தாங்கிப் பிடிப்பது தாண்டவம் கதாபாத்திரம் தான் என்றால் அது மிகையல்ல.
கல்யாணத்தின் தாயாக வரும் மணிமேகலை(அம்மா) கதைக்கு தேவையான அளவில் அர்த்தமுள்ளதாக தனது நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இயலாமையின் உருவமாய், கிராமப்புறங்களில் உள்ள தாய்மார்களின் குறியீடாய் தனது ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மணிமேகலை.
ஜெகதாம்பிகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அம்மு அபிராமி தன்னுடைய நடிப்பை மிகையின்றி வெளிப்படுத்தி இருக்கிறார். தான் கல்வி கற்க தன் வாழ்வை தியாகம் செய்த கல்யாணத்தை கரம் பிடிக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், அதனால் வரும் சிக்கல்களை எதிர்கொள்வதிலும் பார்வையாளர்களின் கவனம் பெறுகிறார். கல்யாணம் கூடவே வரும் பூன கதாபாத்திரமும், சிறுவன் கதாபாத்திரமும் தேவையான அளவு நடிப்பை வழங்கியுள்ளனர்.
இசைஞானி இளையராஜாவின் இசை படத்திற்கு தேவையான அளவு பக்குவமாக பரிமாறப்பட்டுள்ளது. கூத்து கலையின் இசையை அதன் இயல்பு மாறாமல் அவ்வவ்வாறே அங்கங்கே அழகாய் ஆழமாய் இசைத்திருப்பார். கதை மாந்தர்கள் பெரும்பாலும் கூத்து கலைஞர்கள் என்பதால் எந்தவொரு சலிப்பும் தட்டாமல் கதை நகர்கிறது. கதைக்களத்தை அதனியல்பு மாறாமல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கதையை எடுக்கு உதவிய அம்பலவாணன் நாடக சபா தலைவர் பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய கலைமாமணி திரு. தாங்கல் சேகர் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த அன்புகளும் நன்றிகளும். படக்குழுவினருக்கு வாழ்த்துகளும் அன்பு முத்தங்களும்…