12th Fail – அதிகாரத்தை அடைந்தால் போதுமா?

Cinema

“சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்”
“வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்”
அதுதான் காலத்தின் குறி!

பேரறிஞர் அண்ணா

படித்த வேலையற்ற இளைஞர்களின் நிலை குறித்த அண்ணாவின் அறிவுச் சொற்றொடர். இதைக் கூறி வருடங்கள் ஐம்பதை கடந்து விட்டாலும் பல நாடுகளில் இந்நிலை இன்றும் மாறவில்லை. அதிலும் குறிப்பாக வட இந்தியாவில்.

இஸ்ரேலில் பாலஸ்தீனிய இனப்படுகொலை (Genocide) நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேல் அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் போடுகிறது. போரில் சேதமடைந்த கட்டிடங்களை சரிசெய்ய மீட்டுருவாக்கம் செய்ய கட்டிட தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு முன் இருந்த தொன்னூறாயிரம் (90,000) பாலஸ்தீனியர்களின் உரிமத்தை இஸ்ரேல் அரசு ரத்து செய்து விட்டது. போரே முடியாத நிலையில் இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் போர்ச்சூழல் மிகுந்த இஸ்ரேலுக்கு கட்டட வேலைக்கு செல்ல விண்ணப்பிக்கிறார்கள். பட்டினிச்சூழலை விட போர்ச்சூழல் மேல் என்று படித்த இளைஞர் ஒருவர் கூறுகிறார்.

12th Fail Tamil Review by SubjectNarrates.com

மிகவும் பின்தங்கிய கிராமமான மத்திய பிரதேசத்திலுள்ள சம்பல் (Chambal) கிராமத்தில் இருந்து தன் தந்தையை போல நேர்மையாகவும், பொதுத்தேர்வை ஏமாற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் காவல்துறை அதிகாரி ஒருவர் நேர்மையான விதமாக அதிகாரத்தை பயன்படுத்துவதை பார்த்தும் அவரைப் போல் ஆக உத்வேகம் கொண்டு தானும் அவரைப் போல் நேர்மையான அதிகாரி ஆகவேண்டும் என நினைக்கிறார்.

அநீதிக்கு எதிராக துப்பாக்கியை எடுக்காமல் நேர்மையான அதிகாரியை நம்புகிறார். அவரின் அதிகாரத்தால் தன் குடும்பம் காப்பாற்றப் படுகின்றனர். அவரைப் போல் ஆக அவரிடமே ஆலோசனை கேட்கிறார். “Don’t Cheat” என்று புத்தி சொல்லும் காவல் துறை அதிகாரியை போல் ஆக நினைத்து போட்டித் தேர்வான UPSC-யில் வறுமையை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்ற கதை தான் 12th Fail.

மனோஜ் சர்மாவாக நடித்த விக்ராந்த் மசே (Vikrant Massey) அந்த கதாபாத்திரத்தை மிக ஆழமாக உள்வாங்கியுள்ளார். படப்பிடிப்பில் Cut சொன்ன போதும் கூட அந்த கதாபாத்திரத்தை விட்டு வெளிவர முடியவில்லை என்றார். கிராமத்து இளைஞர் டில்லி மாநகரத்தில் நண்பர்களின் உதவியோடு வேலை பார்த்துக் கொண்டே படிப்பதும் விடாமுயற்சியும் மீண்டும் முயற்சியும் (Restart) எடுத்து வெற்றி பெற்றதையும் அப்படியே நமக்கு அருகில் நடப்பதைப் போன்று அவ்வளவு யதார்த்தமான எடுத்துள்ளார் இயக்குனர் விது வினோத் சோப்ரா (Vidhu Vinod Chopra).

ஷ்ரத்தா ஜோசியாக வரும் மேதா சங்கர் (Medha Shankar) காதல் காட்சிகளில் Applauseகளை அள்ளுகிறார். நண்பர்களாக வரும் ஜோசி ஆனந்த்விஜய் (Joshi AnantVijay), அன்சுமன் புஷ்கர் (Anshuman Pushkar), அப்பாவாக வரும் ஹரிஷ் கண்ணா (Harish Khanna), பாட்டியாக வரும் சரிதா ஜோசி (Saritha Joshi), அம்மாவாக வரும் கீதா அகர்வால் சர்மா (Geetha Agarwal Sharma) என ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமையாக பொருந்தி நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் சாந்தனு மொய்த்ரா (Shantanu Moitra), ஒளிப்பதிவாளர் ரங்கராஜன் ராமபத்ரன் (Rangarajan Ramabadran), கலை இயக்குனர் ஹேமந்த் வாக் (Hemant Wagh) முக்கியமாக படத்தின் எழுத்தாளர்கள் விது வினோத் சோப்ரா (Vidhu Vinod Chopra), ஜஸ்குன்வார் கோலி (Jaskunwar Kohli), அனுராக் பதக் (Anurag Pathak), ஆயுஷ் சக்சேனா (Aysh Saxena) இணைந்து பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக அமைத்து எழுதியுள்ளனர். படக்குழுவினர் அனைவருக்கும் கைத்தட்டல்கள்.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக 12th Fail இருக்கும். குறிக்கோளை குவியப்படுத்தி கவனம்சிதறாமல் தொடர்ந்து பயணிக்க ஒரு Energetic Fuel ஆகவும் இப்படம் எப்போதும் இருக்கும்.

இப்படியான கதைகள் நம் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என ஏராளமானோருக்கு ஏன் நமக்கும் கூட உண்டு. ஆனால் அப்படி அரும்பாடுபட்டு அதிகாரத்திற்கு சென்றவர்களில் எத்தனை பேர் அந்த அதிகாரத்தை நேர்மையாக பாமர மக்களுக்காக பயன்படுத்துகின்றனர் என்றால் கேள்விக்குறி தான். படம் பேச தவறிய முக்கியமான விசயம் இது. இங்கிருக்கக் கூடிய அமைப்பு ஊழலில் அழுகிவிட்டது(System Corrupted), அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது (Power Misused), தகுதியான நபர்களிடம் அதிகாரம் இல்லை (Power is not in deserved person’s hand) என்று படம் முழுக்க பேசிவிட்டு அந்த அதிகாரத்தை அடைந்த பிறகு என்ன செய்தார் என்பதை கூட End Card-களில் கூட சொல்லவில்லை. தனி மனித வெற்றியாக மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்படி அதிகாரத்தை அடைந்தவர்கள் இந்த அமைப்பை (System) மாற்ற முயற்சித்தார்களா? ஏழை எளிய பாமர மக்களுக்காக பணியாற்றினார்களா? விழிப்புணர்வையாவது ஏற்படுத்தினார்களா? அல்லது குறைந்தபட்சம் அந்த அதிகாரத்தை நேர்மையாகவாவது பயன்படுத்துகிறார்களா? இவற்றையும் கருத்தில் கொண்டு தான் தனிமனிதரின் வெற்றி சமூகத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாததாகிறது. படத்தில் சொன்ன அம்பேத்கரின் வாசகத்தை அதிகாரத்திற்கு சென்றபின் மறவாது அதை செயல்படுத்த முயற்சிப்பது/முயற்சிப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

Educate!
Agitate!
Unite!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *