“புராதன பழக்க வழக்கங்கள் எல்லாம் சமயத்தில் அடைக்கலம் புகுகின்ற” என்று தேவிபிரசாத் சட்டோபாத்தியா குறிப்பிடுவார்.தொழில்நுட்ப வளர்ச்சி பெற்ற இன்றைய சமுதாயத்தில் சடங்குகள் மற்றும் மந்திரத்தின் உளவியல் பயன் தேவையற்றது என்றானாலும் இன்றும் அன்றாட வாழ்க்கையில் மந்திரமும் மந்திரச் சடங்குகளும் செல்வாக்குடன் திகழ்கின்றன. மந்திரம் என்பது ஏதோ மாயாஜால வித்தையோ வடமொழியில் கூறும் சுலோகங்களோ அல்ல. இயற்கையை புரிந்து கொள்ளமுடியாத ஆதி மனிதன் இயற்கையை கட்டுப்படுத்தவும் அதனிடமிருந்து பயங்களைப் பெறவும் உருவாக்கப்பட்ட ஒரு ‘கற்பனைக் கோட்பாடே’ மந்திரம். வேட்டையாடுதல் மற்றும் உணவு சேகரித்தல் போன்ற பொருளாதார வளர்ச்சி குன்றிய புராதன வேட்டை சமுதாயத்தை விட இயற்கையின் பங்களிப்பு வேளாண்மை சமூகத்தில் மிகவும் அவசியமாக இருந்ததால் மந்திர சடங்குகள் நிலைத்து நின்றது. வேளாண்மை விளைநிலத்தின் உற்பத்தியும் மனித உற்பத்தியும் சமூகம் வளர உதவியதால் விளைநிலத்தையும் பெண்ணையும் ஒப்பிட்டு, பெண்ணை தெய்வமாக வணங்கும் தாய் தெய்வ வழிபாட்டு முறை உருவாகியது. இடையில் நுழைந்த
சாதி மத வர்ண கோட்பாடுகள் முதலாளித்துவ உற்பத்தி முறை பெண்களை குழந்தைகளை உற்பத்தி செய்யும் இயந்திரமாக்கி அதிகாரங்களை பிடுங்கியது. பின்னர் வந்த தனியார்மயம் தாராளமயம் பெண்களை ஒரு சந்தை பொருளாகவே மாற்றிவிட்டது.
கிராமத்து வாழ்வியல் எவ்வளவு அழகானதோ அதைவிட அகோரமனது அதன் சாதிய சமூக கட்டமைப்பு. ஆணாதிக்கம், சாதி ஆதிக்கம், சாதியை பாதுகாக்கும் இன்ன பிற சடங்கு சம்பிரதாய ஆதிக்கம் என ஒட்டுமொத்த ஆதிக்கமும் ஒன்றுசேர்ந்து அடக்குவது பெண்களையே இன்னும் சரியாக சொல்வதென்றால் பெண்களின் தேகத்தில் தான் அவை ஆதிக்கம் செய்கிறது. பல்வேறு அரசியல் சமயத் தாக்குதல்களுக்குள்ளான கிராமங்களில் சமய சாங்கிய சடங்குகள் மந்திரங்கள் எச்சங்களாக இன்றும் நிலைத்திருக்கின்றன; அவற்றில் பல உறுமாறியிருக்கின்றன. தற்காலிக விடுதலையோ அதிகாரத்தையோ வழங்கும் சமத்துவ சடங்குகளும் கெட்டுத் தட்டி இறுகிப்போன சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் கடைபிடிக்கும் சமய சடங்குகளும் தமிழ்நாட்டின் பண்பாட்டு நகரங்களான MRT என்றழைக்கப்படும் தொன்மையான மதுரை(M), இராமநாதபுரம்(R), திருநெல்வேலி(T) (இன்றைய அண்டை மாவட்டங்களையும் உள்ளடக்கியது) நிலப்பரப்பின் social structure-ல் குறுக்கு வெட்டாக பின்னிப் பினைந்துள்ளது. அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த மதுரையின் நிலப்பரப்பில் சுற்றுவட்டார கிராமங்களில் சமகாலத்தில் சகஜமாக பெண்களுக்கு எதிராக நிகழும் ஒடுக்குமுறையை யதார்த்தமான கிராமத்து மனிதர்களை வைத்து சர்வதேச சினிமாவாக கொட்டுக்காளி திரைப்படத்தை கூழாங்கல் திரைப்பட இயக்குனர் P.S.வினோத் ராஜ் நமக்கு தந்துள்ளார்.
தென் மாவட்டங்களில் குறிப்பாக கிராமங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தை தான் கொட்டுக்காளி. தன் விருப்பப்படி நடக்கும் பெண்ணின் செயல் யாருக்கும் பிடிக்காமலோ அல்லது அந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு தவறாக தோன்றினாலோ அப்படிப் பட்ட பெண்களை ‘அவ ஒரு கொட்டுக்காளி’ என்று திட்டுவார்கள். படத்தின் நாயகி மீனாவாக வரும் அன்னா பென் தான் கொட்டுக்காளி. தன் மனதிற்கு பிடித்த ஒருவரை காதலிக்கும் மீனாவை பேய் பிடித்து விட்டது, ‘மருந்து வச்சு மயக்கிட்டான்’ என்று அந்த பெண்ணிற்கு சமய சடங்கு செய்வது கிராமங்களில் இன்றளவும் நடக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக வேறு சாதியை சேர்ந்த ஆணாக இருந்தால் அதன் எல்லை ஆணவக்கொலை வரை நீடிக்கிறது. இந்த நவீன Artificial Intelligence, Machine Language யுகத்திலும் இது போன்ற சடங்கு மந்திரங்கள் அன்றாடம் நம் வீட்டில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தூய மந்திரம், தீய மந்திரம், தொத்து மந்திரம், பாதுகாப்பு மந்திரம், அழிப்பு மந்திரம், உற்பத்தி மந்திரம் என்று இன்றும் தொடர்ந்து பெரும்பான்மை மக்களிடையே கடைபிடிக்கப்பட்டுக் கொண்டுதான் உள்ளது. பேயை ஓட்ட மீனாவின் குடும்பத்தினர் வருங்கால கணவனான பாண்டியோடு (சூரியோடு) பாலமேட்டுக்கு செல்கின்றனர். செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்கள் பேய் ஓட்டினார்களா இல்லையா என்பதே படத்தின் கதை.
சிறையில் அடைபட்டு தன் சுதந்திரத்தை பறிகொடுத்த மீனா உணர்வால் அகக் காட்சிகளில் தன் சுதந்திரத்தை தேடுவது, கட்டிவைக்கப்பட்டிருக்கும் சேவலும் மீனாவும் ஒன்று தான் என்று பல காட்சிகளில் உணர்த்தப்படுவது, ஆட்டோவில் அடைக்கப்பட்ட பெண்கள், சுதந்திரமாக scooter-ல் வரும் ஆண்கள், இயற்கை உபாதைகளுக்கும் பெண்கள் படும் பாடு அதிலும் கூட ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம், பின்னணியில் ஓடும் “தாய்மாமன் சீர் சுமந்து வாரண்டி”, “ஒத்தையடிப் பாதையிலே” பாடல், வழியை மறிக்கும் காளையை விரட்ட முடியாதது என்று குறியீட்டுக் காட்சிகளால் திரைப்படம் நிறைந்திருக்கிறது அதே நேரம் நீளமான காட்சிகள் சில இடங்களில் பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நம்முடைய பிரதிபலிப்பாக இருப்பதை போன்று connect செய்துகொள்ள முடிகிறது. வாடகை ஆட்டோவில் சென்றுமட்டும் பேயோட்டுவதில்லை சொகுசு கார் வைத்திருப்பவர்களும் தன் வீட்டுப் பெண்களுக்கு இது போன்ற அநீதிகளை இழக்கின்றனர் பெண்களை அடிமைப்படுத்த வர்க்கம் ஒரு தடையில்லை என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளும் படி காட்சிகள் வைத்திருப்பது தெளிவான நேர்த்தியான திரைக்கதைக்கு உதாரணம்.
உடனடி மாற்றமாக நிகழ்த்த முடியாத மக்களின் மனதில் நீண்ட காலமாக படிந்துள்ள மாசுவை சுட்டிக் காட்டி அதை சலவை செய்ய முடியாத காரியம் ஆனால் ஒவ்வொரு தனி மனிதரும் கல்வி விழிப்புணர்வு அரசியல் போன்ற ஏதோ ஒன்றின் உதவியோடு அவர்களாக முயற்சித்தால் மட்டுமே இது சாத்தியம். Open Ending Climax ஆக இந்த திரைப்படத்தை தந்தது தெளிவான பார்வை. பின்னணி இசை இல்லையா என்று யோசிக்கும் அளவிற்கு Experiment முயற்சியாக background music இல்லாமல் எடுத்து அதில் வெற்றி பெற்றுள்ளார்கள். Interval விடாமல் இருந்திருந்தால் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. அன்னா பென், சூரி, Supporting artists, சேவல் முதற்கொண்டு அற்புதமான நடிப்பை அர்ப்பணிப்போடு செய்திருப்பதற்கு பாராட்டாமல் இருக்க முடியாது. படம் பேசு பொருளானதற்கும் மக்களிடையே சென்று சேர்ந்ததற்கும் படத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனும் நடிகர் சூரியும் தான் காரணம். நம்முடைய நிலப்பரப்பில் நம்முடைய வாழ்க்கையை உலகத் தரத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச சினிமாவாக கொட்டுக்காளியை தந்ததற்கு படக்குழுவினருக்கு மனதார பாராட்டுக்கள்.