இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இன்று வெளியாகியிருக்கிறது ‘தங்கலான்’ திரைப்படம். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டதில் உள்ள தங்க வயல்களில் வேலை பார்ப்பதற்கு தமிழகத்திலிருந்து அடிமைக்கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வரலாற்றை புனைவுகளோடு காட்சிப்படுத்த முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். மனித நாகரீக வரலாற்றில் ‘நிலம்’ எவ்வாறு மனிதர்களை அடிமையாக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது என்பதை பல்வேறு நிலைகளில் இயக்குநர் காட்சிப்படுத்தி இருக்கிறார். மக்களை அடிமைப்படுத்த அரசர்கள், குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள், ஆங்கிலேயர்கள் என அனைவரும் நிலங்களைத் தான் தங்களது அதிகாரச் சின்னங்களாக பயன்படுத்தினர். இயக்குநர் பா.ரஞ்சித் என்றாலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படைப்பை எடுப்பவர் என்ற கருத்தியலுக்கு ஒருபடி மேலே சென்று ஒரு இனம் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டது என்பதை வரலாற்றோடு சிறிது புனைவையும் உட்புகுத்தி திரைப்படமாக்கி உள்ளார். தன்னுடைய முயற்சியில் 80% வெற்றியும் அடைந்துள்ளதாகவே தனிப்பட்ட முறையில் நான் கருதுகிறேன்…
வணிகமே முதன்மையானதாக மாறிவிட்ட இன்றைய சூழலில் தாங்கள் வாழ்ந்த இடத்தில் வைரமே கிடைத்தாலும் அதை பொருட்படுத்தாமல் தங்களுக்கு உண்ண உணவும், உறைவிடமும் தந்த மண்ணை என்றும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மலைவாழ் மக்கள். அவர்கள் இருக்கும் இடமெல்லாம் தங்கம் உள்ளது என்பதறிந்து அதை எடுக்க முற்படுபவர்களை எல்லாம் காலம் காலமாக எதிர்தாக்குதல் நடத்தி அவ்விடத்தை காத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தங்ககத்தை அவர்கள் கைப்பற்றினார்களா அல்லது மலைவாழ் மக்கள் தங்கள் நிலத்தை காப்பாற்றினார்களா என்பதே கதை…
தான் ஏற்றுக்கொண்ட தங்கலான் கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பை கொடுத்து அதற்கு தகுந்த நியாயம் செய்திருக்கிறார் நடிகர் விக்ரம். எந்த ஒரு கதாபாத்திரத்தில் ஒரு நடிகரின் சாயலை துளியளவும் காண இயலவில்லையே அங்கேயே அக்கதாபாத்திரம் வெற்றி அடைந்து விடுகிறது. இவரைத்தவிர இக்கதாபாத்திரத்தை வேறு எவராலும் செய்திருக்க முடியாது என்ற சொல்லாடலுக்கு இலக்கணமாக நடிகர் விக்ரம் தனது அபரிதவிதமான உழைப்பை தங்கலான் கதாபாத்திரத்திற்கு வழங்கி இருக்கிறார்…
ஆதி காலம் தொட்டே தமிழகத்தில் பொதுவாக பெண் தெய்வ வழிபாடே இருந்து வருகிறது. அந்த வகையில் தங்கலான் திரைப்படத்திலும் தன் நிலத்தை காக்கும் பெண் தெய்வமாக, முதன்மையானவராக ஒரு பெண்ணையே ஆரத்தி என்ற கதாபாத்திரம் வழியாக முன்னிலைப்படுத்தி இருப்பது சிறப்புக்குரியது. தமிழ் திரையுலகில் அவ்வளவு பரிட்சையம் இல்லையென்றாலும் தமிழ் நிலபரப்புக்கே உரியவர் போன்று மிக கச்சிதமாக தனது ஆரத்தி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகன். அவரது திரைவாழ்வில் ஆரத்தி கதாபாத்திரம் நீங்கா இடம்பெறும் என்பதில் ஐயமில்லை…
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ராமானுஜர் பூணூல் அணிவித்த வரலாற்றை நடிகர் பசுபதி கதாபாத்திரத்தின் வழியே காட்சிபடுத்தி இருப்பது பாராட்டுக்குறியது. ஆண்டாண்டு காலமாக மன்னர்களிடமும், ஆங்கிலேயர்களிடமும் பிராமணர்கள் எவ்வகையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர் என்பதை இயக்குநர் பா.ரஞ்சித் அப்பட்டமாக காட்சிபடுத்தி இருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் Daniel Caltagirone தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்…
தங்கலானின் துணைவியாக வரும் நடிகை பார்வதியும், மற்றபிற கதாபாத்திரங்களும் குறை சொல்வதற்கு இடமளிக்காமல் தங்களது கதாபாத்திர அசைவுகளை நெளிவு சுளிவுகளோடு அரங்கேற்றி உள்ளனர்…
கதைக்கு ஏற்ற நிலப்பரப்புகளும், காட்சி அமைப்புகளும் தேவையான சில இடங்களைத் தவிர தன்னுடைய இயல்பை மீறாமல் படமாக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பின் தன்மையை, அதன் இயல்பை பார்க்கும் ரசிகர்களிடத்தில் கடத்துவதிலேயே அப்படைப்பு பாதியளவு வெற்றி பெற்று விடுகிறது(உதாரணமாக பருத்திவீரன், கூழாங்கல்). அந்த வகையில் தங்கலான் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் தகிக்கும் நிலப்பரப்பின் உஷ்ணத்தை உழி அடித்தார் போன்று கடத்தி விடுகிறது…
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை தங்கலான் படத்திற்கு பெரிதளவு உதவி புரிந்துள்ளது என்றாலும் கதாபாத்திரங்களின் வசனங்களை தெளிவாக கேட்க முடியாத அளவிற்கு இசை குறுக்கிட்டு கதைக்களத்தை பின்தொடர்வதை அவ்வப்போது முட்டுக்கட்டை போடுகிறது. வாழ்வியலோடு கூடிய பாடல்கள் சிறந்த உணர்வைத் தருகின்றன. பின்னணி இசையை மட்டும் சரியான விகிதத்தில் பயன்படுத்தி இருந்தால் படம் மேலும் மெருகூட்டப்பட்டிருக்கும்…
தங்ககலான் திரைப்படக் குழவினருக்கு அன்புகளும் வாழ்த்துகளும்… மனிதம் போற்றுவோம்…