இனவரைவியல் (Ethnography) குறித்து தமிழ்ச் சமூகத்தில் மிகக் குறைவான அளவே படைப்புகள் வந்துள்ளது. நா. வானமாமலை, பக்தவத்சல பாரதி, ஆ.சிவசுப்பிரமணியன், தொ. பரமசிவன் போன்ற அறிஞர்கள் இதில் குறிப்பிடத்தகுந்தவர்கள். நகரங்களில் கணிசமான அளவும் கிராமங்களில் ஓரிரு குடும்பங்களாக தமிழ்ச் சமூகத்தில் கவனத்தில் கொள்ளப்படாத ஒடுக்கப்பட்ட மக்களாகிய வண்ணார், குடி நாவிதர், காட்டு நாயக்கர் போன்ற குழுவை மையமாகக் கொண்ட கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் நோக்கில் ஆய்வுகள் நிகழ்தல் மிக அவசியமானதாகிறது. அவ்வகையில் தேவி பாரதி எழுதிய நீர்வழிப் படூஉம் கொங்கு மண்டலத்தில் குடிநாவிதர்களைப் பற்றிய நாவல் 2023 ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது.
கைவிடப்பட்ட தமிழ் கிராமங்களில் ஓன்றான உடையாம்பாளையத்தில் தங்கள் வாழ்வில் பட்ட கதையான துயரங்களையும் கொண்டாட்டங்களையும் இப்போது தூர்ந்து கிடைக்கும் மரம் செடி கொடி புதர் என்று புல் பூண்டுகளை இரசித்து வாழ்வின் மீது பற்றோடும் நம்பிக்கையோடும் நேசித்து வாழ்ந்து வந்த குடிநாவிதர்களின் life தான் நீர்வழிப் படூஉம். நீர்வழிப் படூஉம் புணைபோல் என்ற தமிழர்களின் வழிகாட்டியான புறநானூற்று பாடல் வரிகள் தான் புத்தகத்தின் தலைப்பு. நூலின் தலைப்பே இந்த நாவலை வாசிக்க தூண்டியது. நீரின் போக்கில் செல்வது போல வாழ்வின் போக்கில் அதன் இன்ப துன்பங்களில் உழன்று எந்த நிலையிலும் வாழ்வை கைவிடாமல் துளிர்விடும் நம்பிக்கையோடு பயணிக்கும் மனிதர்களின் நுட்பமான உணர்வுகள் குறித்தும் எப்படிப்பட்ட வாழ்க்கையையும் விடாப்பிடியாக பற்றி பயணிக்கும் உறுதியும் நமக்கு தொடர்ந்து நம்பிக்கை அளிக்கிறது.
ஒரு எழவில் இருந்து தொடங்கும் கதை திசைக்கொருபுறம் சிதறி பிரிந்து கிடைக்கும் உறவுகளை ஒன்றிணைத்து மீண்டும் தொடர்ந்து இணைந்து பயணிக்க வைக்க காரமாக இருக்கிறது காரு மாமாவின் கதாபாத்திரம். தனிமை தந்த தீராத வலி கடந்த கால நினைவலைகளில் பயணித்து துக்கவலைகளில் மாட்டிக்கொள்ள வைத்து விடுகிறது. சக மனிதரின் துணையில்லாமல் அதிலிருந்து சமகாலத்திற்கு திரும்புவது அவ்வளவு எளிதல்ல. உறவின் வேர்களைத் தேடி ஒரு பித்து பிடித்த பரதேசியாக பயணித்த காரு மாமா கவனிக்கப் பட வேண்டியவர். காரணம் ஏதும் தெரியாமல் அல்லது தெரியப்படுத்தாமல் நகமும் சதையுமாக இருந்த இருவர் “இனி செத்த எழவில்ல” என்று பிரிவது இருவரையும் சார்ந்த உறவுகள் முற்றிலும் துண்டித்துக் கொள்ள முடியாமல் ரகசியமாக தொடர்கின்றன. அவையே பின் ஒரு நாளில் கையறு நிலையில் தவிக்கும் போது மீண்டும் கரம் கொடுக்கிறது. அதற்கு விலையாக ஒரு உயிர் உதிர்வது என்பது தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க முடியாத சடங்காக இன்றும் தொடர்கிறது ஒரு வகையில் அந்த உயிரின் பயன் அதுவோ என்று சிந்திக்க வைக்கிறது. காரு மாமாவின் ஆன்மாவும் அப்படிப்பட்ட ஒன்று தான்.
உயர் குடிகள் என்று கருதும் பண்ணையக்காரர்களின் இன்ப துன்ப பிறப்பு இறப்பு ஏன் அதற்க்கு பாடும் ஒப்பாரி பாடல் என்று எந்த நிகழ்ச்சிகளும் குடிநாவிதர்கள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது என்பதால் அந்த பழக்க வழக்கத்தை காப்பாற்ற நினைக்கும் பண்ணையக்காரர்களின் பரிவில் குடிநாவிதர்களின் பிழைப்பு இருப்பது தெரிகிறது. எனினும் இந்த அன்பான அடிமைத்தனத்தை சமூகக் கட்டமைப்பை எதிர்க்கும் கதை மாந்தர்கள் நாவலின் பற்றாக்குறையாக படுகிறது. கதை மாந்தர்கள் இல்லை என்றாலும் வாசிக்கும் வாசகர்களுக்கு அது கேள்விக்குட்படுத்துகிறது. திருமணத்துக்கு பிறகு ராசம்மா அத்தைக்கு செட்டியுடன் ஏற்பட்ட உறவு காதலா மோகமா என்ற தெளிவு தேவைப்படுகிறது. non-linear type story telling ஒரு சில chapter-களில் tough reading போன்ற உணர்வை ஏற்படுத்தியது. ஆனால் தமிழ்ச் சமூகத்தில் பதிவு செய்யப்படவேண்டிய புதினம் நீர்வழிப் படூஉம் என்பது மாற்றுக்கருத்தில்லை. இரா. முத்துநாகு அவர்களின் சுளுந்தீ நாவலும் இந்த பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பல வருட பகை மறந்து மீண்டும் ஒன்றாக உறவாட ஒரு பயணம் அவசியமாகிறது. அந்த பயணம் அதுகாரும் மனிதர்களுக்குள் இருந்த வன்மம் குற்றவுணர்வு பழி நீங்கி சகஜமான பழைய உறவை விட்ட இடத்தில் இருந்து தொடரும் உணர்வை ஏற்படுத்துகிறது. இவையெல்லாவையும் விட நாவலின் climax தான் ultimate. இறுதி பாகம் தரும் suspense top notch. தேவி பாரதி சொல்வதை போல தாய் வழிச் சமூகத்தில் பகடை விளையாட்டு என்பது பெண்களுக்கு மட்டுமே விளையாடக்கூடிய உரிமை உடைய ஒன்றாக இருந்திருக்க கூடும், ஆண்களுக்கு இன்றைக்கும் அது திருட்டுத்தனமாக விளையாடும் சூதாக உள்ளது என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டியது. தேவி பாரதியின் அம்மா கேட்ட “ரெண்டை” பகடை விளையாட்டில் ராசம்மா அத்தை போட வேண்டும் என்று எண்ணுபவர்களா அல்லது கூடாது என்று எண்ணுபவர்களா என்று நாவலை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம். அனால் இறுதி அத்தியாயத்தை படித்து முடித்த பின் வாசகர்களால் அதிலிருந்து வெளிவருவது கடினம். நிச்சயம் நமக்குள் ஒரு impact-யை ஏற்படுத்தும். வாசிக்கவும்.