Western Cinema Culture-ல் வரலாற்று திரைப்படம் என்றால் இரண்டாம் உலகப்போர் பற்றியும் அதன் தாக்கத்தை தவிர்த்தும் திரைப்படம் எடுப்பதில்லை. அவ்வாறு எடுக்கும் படங்களில் யுத்தங்களை தேசபக்தியாக கொண்டாடும் பார்வையும், அதிகார வேட்கையின் உச்சமாக நிகழும் போரினால் பாதிக்கப்பட்டவர்களின் பார்வையும் என இரண்டு வகையான திரைப்படங்கள் உள்ளன. வெறுப்பின் மீது மிகப்பெரிய வன்முறையை யூத இனத்தின் மீது செய்த ஹிட்லரின் நாசிசத்தால் பலியான எத்தனை எத்தனையோ மக்களின் துயரங்களை இடர்பாடுகளை திரைப்படங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றாலும் குழந்தைகளின் பார்வையில் சொன்ன The Boy in the striped Pajamas முக்கியமானது.
ஹிட்லரின் இராணுவத்தில் உயரதிகாரியாக பதவி உயர்வு பெற்றதால் அதிகாரியின் குடும்பம் வேறு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். தன் நண்பர்களை விட்டுப் பிரிய மனமில்லாமல் 12 வயது சிறுவன் இராணுவத்தின் கட்டுப்பாடுகள் நிறைந்த தனிமையான வீட்டின் அருகில் புதிய நண்பர்களை தேடுகிறார். அந்த சிறுவனுக்கு அருகில் முகாமில் இருக்கும் யூத இனத்தை சேர்ந்த தன் வயதை ஒத்த சிறுவனினிடம் நட்பு கிடைக்கிறது. யாருக்கும் தெரியாமல் அவர்களின் நட்பு தொடர்கிறது. இந்நிலையில் முகாமில் இருக்கும் சிறுவனினுக்கு உதவி செய்வதற்காக முகாமினுள் செல்கின்றார் இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
கல்வி என்ற பெயரில் யூத வெறுப்பு கருத்துக்களை குழந்தைகளுக்கு கர்ப்பிக்கின்றனர். எந்த கேள்வியும் கேட்காமல் அதை அப்படியே நம்பும் சிறுமியும், அனுபவத்தின் மூலம் தனக்கு கிடைத்த அறிவும் உணர்ந்த யதார்த்தமும் வெறுப்பு பிரச்சாரக் கருத்துக்களை கேள்வி கேட்கும் சிறுவன் என ஒரே குடும்பத்தில் இரண்டு விதமான குழந்தைகள். Fatherland Fatherland என்று வார்த்தைக்கு வார்த்தை தேசப்பற்றை கூறும் இராணுவ அதிகாரி தனக்கு வேலை பார்க்கும் சக அதிகாரியின் தந்தை hitler-ன் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்காததை அறிந்து அந்த அதிகாரிக்கு அவருடைய தந்தையையே சிறைபிடிக்க வலியுறுத்துகிறார். சக அதிகாரியின் தந்தை நாட்டில் இல்லாததை அறிந்த பின் படையில் அவரை ஆபத்தான பொறுப்பில் அமர்த்துகிறார். இவ்வளவிற்கும் அந்த சக இராணுவ அதிகாரி யூதர்களின் மீது தீவிர வெறுப்பில் அவர்களை கொடுமைப்படுத்துபவர் யூத இனத்தின் குழந்தைகளும் அதற்க்கு விதிவிலக்கல்ல என்பது படம் பார்க்கையில் நமக்கு தெரிகிறது. நாசி இராணுவத்திற்கு இவ்வளவு விசுவாசமாக இருப்பவருக்கே இது தான் நிலைமை என்று நமக்கு புரிகிறது.
படத்தில் வரும் பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டியவை. ஒவ்வொரு character-ம் அது சார்ந்த புறக்காரணிகளால் கட்டுப்படுத்தப்பட்டாலும் முடிந்தவரை மனிதத்தை மேன்மை படுத்துகின்றது. தன் மகனாகவே இருந்தாலும் இராணுவத்தில் பதிவி உயர்வு கிடைத்த போதும் அந்த அதிகாரியின் அம்மாவிற்கு அதில் விருப்பமில்லை. ஹிட்லரின் யூத இனவெறிக் கொள்கை கொண்ட நாசி இராணுவத்தின் நடவடிக்கைக்கு எதிராக அப்பாவி யூத மக்களுக்கு ஆதரவாக மனிதநேயத்திற்காக குரல் கொடுப்பவராக இருக்கிறார். இராணுவ அதிகாரியான மகன் அதை கண்டித்த போதும் தான் கொண்ட உயரிய கொள்கையில் இறுதிவரை உறுதியுடன் இருக்கிறார். Professional Skills கொண்ட யூதர்களை அடிமைகளாக வீட்டு வேலைகளை செய்பவர்களாக நடத்திய போதும் அவசர காலத்தில் தன் மகனுக்கு உதவி செய்யும் டாக்டருக்கு நன்றி சொல்வது பணியாளாக இருக்கும் யூத பெண்ணிடம் நடந்துகொள்வது என்று இராணுவ அதிகாரியின் மனைவி அவர்களை யூதர்களாக வெறுக்காமல் உதவி செய்த மனிதர்களாக நினைத்து நன்றியறிகிறார். இராணுவம் சம்பந்தமான வேலை செய்வதாக நினைத்திருந்த அவருக்கு உண்மை தெரியவரும் போது தன் கணவரை வெறுக்கிறார். மறுவாழ்வு முகாம் என்ற பெயரில் வதை முகாம்களில் இரக்கமின்றி படுகொலையாவதை அறிந்து கொண்டு அந்த மோசமான சூழலை விட்டு வெளியேற தன் கணவருடன் போராடி வெல்கிறார்.
வெறும் 60 இலட்சம் நாசி ஜெர்மானிய படையால் 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை எப்படி மிக மோசமாக gas chamber-ல் படுகொலை செய்ய முடிந்தது என்றால் 600 இலட்சத்திற்கு மேற்பட்ட ஜெர்மானியர்கள் மௌனத்தால் என்று அமெரிக்காவின் முன்னாள் குடியரசு தலைவர் Jimmy Carter கூறினார். எனினும் எதிர்க்குரல் எழுப்பிய சில ஜெர்மானியர்களில் ஒருவரை ஆவணப்படுத்தும் விதமாக Stevan Spielberg எடுத்த Schindler’s List போன்ற சில திரைப்படங்கள் வந்திருந்தாலும் நாசி இனத்தை சேர்ந்த 12 வயது ஜெர்மானிய சிறுவனின் பார்வையில் படத்தை செய்திருப்பது பாராட்டத்தக்கது. இரண்டு இனங்களுக்கு இடையில் இருக்கும் பகை குறித்து ஏதும் தெரியாத இரண்டு சிறுவர்களும் பேசிக்கொள்ளும் காட்சிகள் தொடங்கி அவர்களுக்கு இடையில் பூக்கும் நட்பு வரை மிக அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கும். The boy in the striped pajamas என்ற நாவலை தழுவிய திரைப்படத்திற்கு அதன் தன்மை மாறாமல் திரைக்கதையை எழுதியிருக்கிறார் படத்தின் இயக்குநர் Mark Herman. நமக்கு தெரிந்த டைட்டானிக் படத்திற்கு இசையமைத்த James Horner தான் இந்த படத்திற்கும் இசை அமைத்திருக்கிறார், முதல் காட்சியிலேயே ஒரு 12 வயது சிறுவனின் உலகத்தில் நம்மை அழைத்து செல்கிறது. படம் மெதுவாக சென்றாலும் காத்திரமான இறுதிக் காட்சி தரும் அழுத்தத்தில் இருந்து மீள்வது கடினம். மனித மனங்களை மனிதத்தை மேன்மைப்படுத்தும் இது போன்ற திரைப்படங்களை நாம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டும்.
முரண் என்னவென்றால் வரலாற்றில் இவ்வளவு கொடுமைகளை சந்தித்த ஒரு இனம் இன்று அதைவிட மோசமாக இன்னொரு இனமான பாலஸ்தீனியர்களை இனப் படுகொலை செய்கிறது. வருங்காலத்தில் அவர்களுக்காக வருந்தாத மன்னிக்காத இடத்திற்கு நகர்த்தி தங்கள் இனத்திற்கு மீண்டும் தவறு செய்கிறது என்பது கசப்பான உண்மை. அசுரன் படத்தில் சொல்வது போல் அதிகாரத்திற்கு சென்றபின் அவர்கள் உனக்கு செய்தது போன்று நீ வேறு யார்க்கும் செய்யாதே என்ற கருத்து யூதர்களுக்கு நன்றாகவே பொருந்தும்.